சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
8.122   மாணிக்க வாசகர்    திருவாசகம்   கோயில் திருப்பதிகம் - மாறிநின்றென்னை
பண் - அக்ஷரமணமாலை   (கோயில் (சிதம்பரம்) )
Audio: https://sivaya.org/thiruvasagam2/22 Koil thirupathigam.mp3
8.128   மாணிக்க வாசகர்    திருவாசகம்   வாழாப்பத்து - பாரொடு விண்ணாய்ப்
பண் - அக்ஷரமணமாலை   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
Audio: https://sivaya.org/thiruvaasagam/28 Valapatthu Thiruvasagam.mp3
8.129   மாணிக்க வாசகர்    திருவாசகம்   அருட்பத்து - சோதியே சுடரே
பண் - அக்ஷரமணமாலை   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
Audio: https://sivaya.org/thiruvasagam2/29 Arul pathu.mp3
8.137   மாணிக்க வாசகர்    திருவாசகம்   பிடித்த பத்து - உம்பர்கட் ரசே
பண் - அக்ஷரமணமாலை   (சீர்காழி )
Audio: https://sivaya.org/thiruvaasagam/37 Piditha Pathu Thiruvasagam.mp3

Back to Top
மாணிக்க வாசகர்    திருவாசகம்  
8.122   கோயில் திருப்பதிகம் - மாறிநின்றென்னை  
பண் - அக்ஷரமணமாலை   (திருத்தலம் கோயில் (சிதம்பரம்) ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
எழுசீர் விருத்தம்
மாறி நின்று, என்னை மயக்கிடும் வஞ்சப் புலன் ஐந்தின் வழி அடைத்து; அமுதே
ஊறி நின்று; என் உள் எழு பரஞ்சோதி! உள்ளவா காண வந்தருளாய்:
தேறலின் தெளிவே! சிவபெருமானே! திருப்பெருந்துறை உறை சிவனே!
ஈறு இலாப் பதங்கள் யாவையும் கடந்த இன்பமே! என்னுடை அன்பே!

[1]
அன்பினால், அடியேன் ஆவியோடு, ஆக்கை, ஆனந்தமாய்க் கசிந்து உருக,
என் பரம் அல்லா, இன் அருள் தந்தாய்; யான், இதற்கு இலன் ஒர் கைம்மாறு:
முன்பும் ஆய், பின்பும், முழுதும், ஆய், பரந்த முத்தனே! முடிவு இலா முதலே!
தென் பெருந்துறையாய்! சிவபெருமானே! சீர் உடைச் சிவபுரத்து அரசே!

[2]
அரைசனே! அன்பர்க்கு; அடியனேன் உடைய அப்பனே! ஆவியோடு ஆக்கை
புரை புரை கனியப் புகுந்துநின்று, உருக்கி, பொய் இருள் கடிந்த மெய்ச் சுடரே!
திரை பொரா மன்னும், அமுதத் தெண் கடலே! திருப்பெருந்துறை உறை சிவனே!
உரை, உணர்வு, இறந்துநின்று, உணர்வது ஓர் உணர்வே! யான், உன்னை உரைக்கும் ஆறு,உணர்த்தே.

[3]
உணர்ந்த மா முனிவர், உம்பரோடு, ஒழிந்தார் உணர்வுக்கும், தெரிவு அரும் பொருளே!
இணங்கு இலி! எல்லா உயிர்கட்கும் உயிரே! எனைப் பிறப்பு அறுக்கும் எம் மருந்தே!
திணிந்தது ஓர் இருளில், தெளிந்த தூ ஒளியே! திருப்பெருந்துறை உறை சிவனே!
குணங்கள் தாம் இல்லா இன்பமே! உன்னைக் குறுகினேற்கு இனி என்ன குறையே?

[4]
குறைவு இலா நிறைவே! கோது இலா அமுதே! ஈறு இலாக் கொழும் சுடர்க் குன்றே!
மறையும் ஆய், மறையின் பொருளும் ஆய், வந்து என் மனத்திடை மன்னிய மன்னே!
சிறை பெறா நீர் போல், சிந்தைவாய்ப் பாயும் திருப்பெருந்துறை உறை சிவனே!
இறைவனே! நீ, என் உடல் இடம் கொண்டாய்; இனி, உன்னை என் இரக்கேனே?

[5]
இரந்து இரந்து உருக, என் மனத்துள்ளே எழுகின்ற சோதியே! இமையோர்
சிரம் தனில் பொலியும் கமலச் சேவடியாய்! திருப்பெருந்துறை உறை சிவனே!
நிரந்த ஆகாயம், நீர், நிலம், தீ, கால், ஆய், அவை அல்லை ஆய், ஆங்கே,
கரந்தது ஓர் உருவே! களித்தனன், உன்னைக் கண் உறக் கண்டுகொண்டு, இன்றே.

[6]
இன்று, எனக்கு அருளி, இருள் கடிந்து, உள்ளத்து எழுகின்ற ஞாயிறே போன்று
நின்ற நின் தன்மை நினைப்பு அற நினைந்தேன்; நீ அலால் பிறிது மற்று இன்மை;
சென்று சென்று, அணுவாய்த் தேய்ந்து தேய்ந்து, ஒன்று ஆம் திருப்பெருந்துறை உறை சிவனே!
ஒன்றும் நீ அல்லை; அன்றி, ஒன்று இல்லை; யார் உன்னை அறியகிற்பாரே?

[7]
பார், பதம், அண்டம், அனைத்தும், ஆய், முளைத்துப் படர்ந்தது ஓர் படர் ஒளிப்பரப்பே!
நீர் உறு தீயே! நினைவதேல், அரிய நின்மலா! நின் அருள் வெள்ளச்
சீர் உறு, சிந்தை எழுந்தது ஓர் தேனே! திருப்பெருந்துறை உறை சிவனே!
ஆர் உறவு எனக்கு, இங்கு? யார் அயல் உள்ளார்? ஆனந்தம் ஆக்கும் என் சோதி!

[8]
சோதியாய்த் தோன்றும் உருவமே! அரு ஆம் ஒருவனே! சொல்லுதற்கு அரிய
ஆதியே! நடுவே! அந்தமே! பந்தம் அறுக்கும் ஆனந்த மா கடலே!
தீது இலா நன்மைத் திருவருள் குன்றே! திருப்பெருந்துறை உறை சிவனே!
யாது நீ போவது ஓர் வகை? எனக்கு அருளாய் வந்து நின் இணை அடி தந்தே.

[9]
தந்தது, உன் தன்னை; கொண்டது, என் தன்னை; சங்கரா! ஆர் கொலோ, சதுரர்?
அந்தம் ஒன்று இல்லா ஆனந்தம் பெற்றேன்; யாது நீ பெற்றது ஒன்று, என்பால்?
சிந்தையே கோயில் கொண்ட எம்பெருமான்! திருப்பெருந்துறை உறை சிவனே!
எந்தையே! ஈசா! உடல் இடம் கொண்டாய்; யான் இதற்கு இலன், ஓர் கைம்மாறே!

[10]

Back to Top
மாணிக்க வாசகர்    திருவாசகம்  
8.128   வாழாப்பத்து - பாரொடு விண்ணாய்ப்  
பண் - அக்ஷரமணமாலை   (திருத்தலம் திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
எழுசீர் விருத்தம்
பாரொடு, விண்ணாய், பரந்த, எம் பரனே! பற்று நான் மற்று இலேன் கண்டாய்;
சீரொடு பொலிவாய், சிவபுரத்து அரசே! திருப்பெருந்துறை உறை சிவனே!
ஆரொடு நோகேன்? ஆர்க்கு எடுத்து உரைக்கேன்? ஆண்ட நீ அருளிலையானால்,
வார் கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய்; வருக' என்று, அருள் புரியாயே.

[1]
வம்பனேன் தன்னை ஆண்ட மா மணியே! மற்று நான் பற்று இலேன் கண்டாய்;
உம்பரும் அறியா ஒருவனே! இருவர்க்கு உணர்வு இறந்து, உலகம் ஊடுருவும்
செம் பெருமானே! சிவபுரத்து அரசே! திருப்பெருந்துறை உறை சிவனே!
எம்பெருமானே! என்னை ஆள்வானே! என்னை, நீ கூவிக்கொண்டருளே.

[2]
பாடி, மால், புகழும் பாதமே அல்லால், பற்று நான் மற்று இலேன் கண்டாய்;
தேடி, நீ ஆண்டாய்; சிவபுரத்து அரசே! திருப்பெருந்துறை உறை சிவனே!
ஊடுவது உன்னோடு; உவப்பதும் உன்னை; உணர்த்துவது, உனக்கு, எனக்கு உறுதி;
வாடினேன்; இங்கு வாழ்கிலேன் கண்டாய்; வருக' என்று, அருள்புரியாயே.

[3]
வல்லை வாள் அரக்கர் புரம் எரித்தானே! மற்று நான் பற்று இலேன் கண்டாய்;
தில்லை வாழ் கூத்தா! சிவபுரத்து அரசே! திருப்பெருந்துறை உறை சிவனே!
எல்லை மூ உலகும் உருவி, அன்று, இருவர் காணும் நாள், ஆதி, ஈறு, இன்மை
வல்லையாய் வளர்ந்தாய்; வாழ்கிலேன் கண்டாய்; வருக' என்று, அருள்புரியாயே.

[4]
பண்ணின் நேர் மொழியாள் பங்க! நீ அல்லால், பற்று நான் மற்று இலேன் கண்டாய்;
திண்ணமே ஆண்டாய்; சிவபுரத்து அரசே! திருப்பெருந்துறை உறை சிவனே!
எண்ணமே, உடல், வாய், மூக்கொடு, செவி, கண், என்று இவை நின்கணே வைத்து,
மண்ணின்மேல் அடியேன் வாழ்கிலேன் கண்டாய்; வருக' என்று, அருள்புரியாயே.

[5]
பஞ்சின் மெல் அடியாள் பங்க! நீ அல்லால், பற்று நான் மற்று இலேன் கண்டாய்;
செஞ்செவே ஆண்டாய்; சிவபுரத்து அரசே! திருப்பெருந்துறை உறை சிவனே!
அஞ்சினேன் நாயேன்; ஆண்டு, நீ அளித்த அருளினை, மருளினால் மறந்த
வஞ்சனேன், இங்கு வாழ்கிலேன் கண்டாய்; வருக' என்று, அருள்புரியாயே.

[6]
பருதி வாழ் ஒளியாய்! பாதமே அல்லால், பற்று நான் மற்று இலேன் கண்டாய்;
திரு உயர் கோலச் சிவபுரத்து அரசே! திருப்பெருந்துறை உறை சிவனே!
கருணையே நோக்கிக் கசிந்து, உளம் உருகிக் கலந்து, நான் வாழும் ஆறு அறியா
மருளனேன், உலகில் வாழ்கிலேன் கண்டாய்; வருக' என்று, அருள்புரியாயே.

[7]
பந்து அணை விரலாள் பங்க! நீ அல்லால், பற்று நான் மற்று இலேன் கண்டாய்;
செம் தழல் போல்வாய், சிவபுரத்து அரசே! திருப்பெருந்துறை உறை சிவனே!
அந்தம் இல் அமுதே! அரும் பெரும் பொருளே! ஆர் அமுதே! அடியேனை
வந்து உய, ஆண்டாய்; வாழ்கிலேன் கண்டாய்; வருக' என்று, அருள்புரியாயே.

[8]
பாவ நாசா, உன் பாதமே அல்லால், பற்று நான் மற்று இலேன் கண்டாய்;
தேவர் தம் தேவே, சிவபுரத்து அரசே! திருப்பெருந்துறை உறை சிவனே!
மூ உலகு உருவ, இருவர் கீழ் மேலாய், முழங்கு அழலாய், நிமிர்ந்தானே!
மா உரியானே! வாழ்கிலேன் கண்டாய்; வருக' என்று, அருள்புரியாயே.

[9]
பழுது இல் தொல் புகழாள் பங்க! நீ அல்லால், பற்று நான் மற்று இலேன் கண்டாய்;
செழு மதி அணிந்தாய், சிவபுரத்து அரசே! திருப்பெருந்துறை உறை சிவனே!
தொழுவனோ பிறரை? துதிப்பனோ? எனக்கு ஓர் துணை என நினைவனோ? சொல்லாய்;
மழ விடையானே! வாழ்கிலேன் கண்டாய்; வருக' என்று, அருள்புரியாயே.

[10]

Back to Top
மாணிக்க வாசகர்    திருவாசகம்  
8.129   அருட்பத்து - சோதியே சுடரே  
பண் - அக்ஷரமணமாலை   (திருத்தலம் திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
எழுசீர் விருத்தம்
சோதியே! சுடரே! சூழ் ஒளி விளக்கே! சுரி குழல், பணை முலை மடந்தை
பாதியே! பரனே! பால் கொள் வெள் நீற்றாய்! பங்கயத்து அயனும், மால், அறியா
நீதியே! செல்வத் திருப்பெருந்துறையில் நிறை மலர்க் குருந்தம் மேவிய சீர்
ஆதியே! அடியேன் ஆதரித்து அழைத்தால், அதெந்துவே?' என்று, அருளாயே!

[1]
நிருத்தனே! நிமலா! நீற்றனே! நெற்றிக் கண்ணனே! விண் உளார் பிரானே!
ஒருத்தனே! உன்னை, ஓலம் இட்டு அலறி, உலகு எலாம் தேடியும், காணேன்;
திருத்தம் ஆம் பொய்கைத் திருப்பெருந்துறையில் செழு மலர்க் குருந்தம் மேவிய சீர்
அருத்தனே! அடியேன் ஆதரித்து அழைத்தால், அதெந்துவே?' என்று, அருளாயே!

[2]
எங்கள் நாயகனே! என் உயிர்த் தலைவா! ஏல வார் குழலிமார் இருவர்
தங்கள் நாயகனே! தக்க நல் காமன் தனது உடல் தழல் எழ விழித்த
செம் கண் நாயகனே! திருப்பெருந்துறையில் செழு மலர்க் குருந்தம் மேவிய சீர்
அம் கணா! அடியேன் ஆதரித்து அழைத்தால், அதெந்துவே?' என்று, அருளாயே!

[3]
கமல நான்முகனும், கார் முகில் நிறத்துக் கண்ணனும், நண்ணுதற்கு அரிய
விமலனே, எமக்கு வெளிப்படாய்' என்ன, வியன் தழல் வெளிப்பட்ட எந்தாய்!
திமில நான்மறை சேர் திருப்பெருந்துறையில் செழு மலர்க் குருந்தம் மேவிய சீர்
அமலனே! அடியேன் ஆதரித்து அழைத்தால், அதெந்துவே?' என்று, அருளாயே!

[4]
துடி கொள் நேர் இடையாள், சுரி குழல் மடந்தை துணை முலைக்கண்கள் தோய் சுவடு,
பொடி கொள் வான் தழலில், புள்ளி போல், இரண்டு பொங்கு ஒளி தங்கு மார்பினனே!
செடி கொள் வான் பொழில் சூழ் திருப்பெருந்துறையில் செழு மலர்க் குருந்தம் மேவியசீர்
அடிகளே! அடியேன் ஆதரித்து அழைத்தால், அதெந்துவே?' என்று, அருளாயே!

[5]
துப்பனே, தூயாய்! தூய வெள் நீறு துதைந்து எழு துளங்கு ஒளி வயிரத்து
ஒப்பனே! உன்னை உள்குவார் மனத்தில் உறு சுவை அளிக்கும் ஆர் அமுதே!
செப்பம் ஆம் மறை சேர் திருப்பெருந்துறையில், செழு மலர்க் குருந்தம் மேவிய சீர்
அப்பனே! அடியேன் ஆதரித்து அழைத்தால், அதெந்துவே?' என்று, அருளாயே!

[6]
மெய்யனே! விகிர்தா! மேருவே வில்லா, மேவலர் புரங்கள் மூன்று எரித்த
கையனே! காலால் காலனைக் காய்ந்த, கடும் தழல் பிழம்பு அன்ன மேனிச்
செய்யனே! செல்வத் திருப்பெருந்துறையில் செழு மலர்க் குருந்தம் மேவிய சீர்
ஐயனே! அடியேன் ஆதரித்து அழைத்தால், அதெந்துவே?' என்று, அருளாயே!

[7]
முத்தனே! முதல்வா! முக்கணா! முனிவா! மொட்டு அறா மலர் பறித்து, இறைஞ்சி,
பத்தியாய் நினைந்து, பரவுவார் தமக்குப் பர கதி கொடுத்து, அருள்செய்யும்
சித்தனே! செல்வத் திருப்பெருந்துறையில் செழு மலர்க் குருந்தம் மேவிய சீர்
அத்தனே! அடியேன் ஆதரித்து அழைத்தால், அதெந்துவே?' என்று, அருளாயே!

[8]
மருளனேன் மனத்தை மயக்கு அற நோக்கி, மறுமையோடு இம்மையும் கெடுத்த
பொருளனே! புனிதா! பொங்கு வாள் அரவம், கங்கை நீர், தங்கு செம் சடையாய்!
தெருளும் நான்மறை சேர் திருப்பெருந்துறையில் செழு மலர்க் குருந்தம் மேவிய சீர்
அருளனே! அடியேன் ஆதரித்து அழைத்தால், அதெந்துவே?' என்று, அருளாயே!

[9]
திருந்து வார் பொழில் சூழ் திருப்பெருந்துறையில் செழு மலர்க் குருந்தம் மேவிய சீர்
இருந்தவாறு எண்ணி, ஏசறா, நினைந்திட்டு, என்னுடை எம்பிரான்' என்று என்று,
அருந்தவா! நினைந்தே, ஆதரித்து அழைத்தால், அலை கடல் அதனுளே நின்று
பொருந்த, வா; கயிலை புகு நெறி இது காண்; போதராய்' என்று அருளாயே!

[10]

Back to Top
மாணிக்க வாசகர்    திருவாசகம்  
8.137   பிடித்த பத்து - உம்பர்கட் ரசே  
பண் - அக்ஷரமணமாலை   (திருத்தலம் சீர்காழி ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
எழுசீர் விருத்தம்
உம்பர்கட்கு அரசே! ஒழிவு அற நிறைந்த யோகமே! ஊத்தையேன் தனக்கு
வம்பு எனப் பழுத்து, என் குடி முழுது ஆண்டு, வாழ்வு அற வாழ்வித்த மருந்தே!
செம் பொருள் துணிவே! சீர் உடைக் கழலே! செல்வமே! சிவபெருமானே!
எம்பொருட்டு, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?

[1]
விடை விடாது உகந்த விண்ணவர் கோவே! வினையனேனுடைய மெய்ப் பொருளே!
முடை விடாது, அடியேன் மூத்து, அற மண் ஆய், முழுப் புழுக் குரம்பையில் கிடந்து,
கடைபடாவண்ணம் காத்து, எனை ஆண்ட கடவுளே! கருணை மா கடலே!
இடைவிடாது, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?

[2]
அம்மையே! அப்பா! ஒப்பு இலா மணியே! அன்பினில் விளைந்த ஆர் அமுதே!
பொய்ம்மையே பெருக்கி, பொழுதினைச் சுருக்கும், புழுத் தலைப் புலையனேன் தனக்கு,
செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே! சிவபெருமானே!
இம்மையே, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?

[3]
அருள் உடைச் சுடரே! அளிந்தது ஓர் கனியே! பெரும் திறல் அரும் தவர்க்கு அரசே!
பொருள் உடைக் கலையே! புகழ்ச்சியைக் கடந்த போகமே! யோகத்தின் பொலிவே!
தெருள் இடத்து அடியார் சிந்தையுள் புகுந்த செல்வமே! சிவபெருமானே!
இருள் இடத்து, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?

[4]
ஒப்பு உனக்கு இல்லா ஒருவனே! அடியேன் உள்ளத்துள் ஒளிர்கின்ற ஒளியே!
மெய்ப் பதம் அறியா வீறு இலியேற்கு, விழுமியது அளித்தது ஓர் அன்பே!
செப்புதற்கு அரிய செழும் சுடர் மூர்த்தீ! செல்வமே! சிவபெருமானே!
எய்ப்பு இடத்து, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?

[5]
அறவையேன் மனமே கோயிலாக் கொண்டு, ஆண்டு, அளவு இலா ஆனந்தம் அருளி,
பிறவி வேர் அறுத்து, என் குடி முழுது ஆண்ட பிஞ்ஞகா! பெரிய எம் பொருளே!
திறவிலே கண்ட காட்சியே! அடியேன் செல்வமே! சிவபெருமானே!
இறவிலே, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?

[6]
பாச வேர் அறுக்கும் பழம் பொருள்! தன்னைப் பற்றும் ஆறு, அடியனேற்கு அருளி,
பூசனை உகந்து, என் சிந்தையுள் புகுந்து, பூம் கழல் காட்டிய பொருளே!
தேசு உடை விளக்கே! செழும் சுடர் மூர்த்தீ! செல்வமே! சிவபெருமானே!
ஈசனே! உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?

[7]
அத்தனே! அண்டர் அண்டம் ஆய் நின்ற ஆதியே! யாதும் ஈறு இல்லாச்
சித்தனே! பத்தர் சிக்கெனப் பிடித்த செல்வமே! சிவபெருமானே!
பித்தனே! எல்லா உயிரும் ஆய்த் தழைத்து, பிழைத்து, அவை அல்லை ஆய் நிற்கும்
எத்தனே! உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?

[8]
பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து, நீ, பாவியேனுடைய
ஊனினை உருக்கி, உள் ஒளி பெருக்கி, உலப்பு இலா ஆனந்தம் ஆய
தேனினைச் சொரிந்து, புறம் புறம் திரிந்த செல்வமே! சிவபெருமானே!
யான் உனைத் தொடர்ந்து, சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?

[9]
புன் புலால் யாக்கை புரை புரை கனிய பொன் நெடும் கோயிலாப் புகுந்து, என்
என்பு எலாம் உருக்கி, எளியை ஆய், ஆண்ட ஈசனே! மாசு இலா மணியே!
துன்பமே, பிறப்பே, இறப்பொடு, மயக்கு, ஆம் தொடக்கு எலாம், அறுத்த நல் சோதீ!
இன்பமே! உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?

[10]
Back to Top

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai list